பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில்
தமிழ் ரசிகர்கள் அதிகம் அறிந்தவர் ராமநாதபுரத்து (கவுண்டமணி) செந்திலை. ஆனால் கோவை செந்திலை சில படங்களில் பார்த்த நினைவிருக்கலாம். 400 படங்களுக்கு மேல் நடித்தும் கடைசி காலத்தில் வறுமையில் வாடியவர் கோவை செந்தில்.
கோவை அருகேயுள்ள பள்ளிப்பாளையம் இவரது சொந்த ஊர். இயற்பெயர் குமாரசாமி. சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்தார். இவரது நாடகம் ஒன்றை பார்த்த கே.பாக்யராஜ் அவருக்கு கோவை செந்தில் என்று பெயர் சூட்டி, 'ஒரு கை ஓசை' படத்தில் அறிமுகப்படுத்தினார். பின்னர் பாக்யராஜ் அலுவலகத்திலேயே தங்கி இருந்து அவரது அனைத்து படங்களிலும் நடித்தார்.
பெரும்பாலும் பூசாரி மற்றும் பிச்சைக்காரர் வேடங்களே இவருக்கு அமைந்தன. 'இது நம்ம ஆளு', 'பவுனு பவுனுதான்', 'அவசர போலீஸ் 100' போன்றவை கோவை செந்தில் நடித்த சில முக்கியமான படங்கள்.
சுமார் 400 படங்கள் வரை நடித்திருக்கும் செந்தில், ஆரம்பத்திலிருந்தே சென்னையில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது கோவை சென்று குடும்பத்தை சந்தித்து வருவார்.
ஒரு விபத்தில் சிக்கிய அவர் கவனிக்க ஆள் இன்றி குடும்பத்தோடு சென்றார். படங்களில் நடிக்காததால் பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்த செந்தில் சில நடிகர்களின் உதவியால் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது 74வது வயதில் 2018ம் ஆண்டு காலமானார்.