கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை
இந்திய அளவில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்தில் நடிகர் சுதீப் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள பிடாடி என்ற இடத்தில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோஸ் அரங்கில் அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரான ஐசரி கணேஷுக்கு சொந்தமான ஒரு ஸ்டுடியோ.
அந்த ஸ்டுடியோவில் சுற்றுச்சூழல் விதிகள், நடைமுறைகளுக்குட்பட்டு அமைக்கப்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதையடுத்து அங்கு நடைபெற்று வரும் பிக்பாஸ் அரங்கை உடனடியாக மூடும்படி கர்நாடக மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
விதிமீறலுக்கான விளக்கத்தையும் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்கள். சமீபத்தில்தான் அங்கு கன்னட பிக் பாஸ் சீசன் 12 ஆரம்பமானது. அரசின் உத்தரவை அடுத்து ராம்நகர் தாசில்தார் சீல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
போட்டியாளர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்து வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 2024 மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பிய பின்பும் அந்த ஸ்டுடியோவில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்ததாகவும், இந்திய பசுமைத் தீர்ப்பாயத்தின் விதிகளை மீறியதும் நடந்துள்ளது என வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.