உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ

இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ


பியார், பிரேமம் என எப்படி சொன்னாலும் காதல், காதல்தான். அப்படியாக 'பிரேமலு' படத்தின் மூலம் '2கே' கிட்ஸ்களின் காதல் தேவதையாக மாறியிருக்கிறார் நடிகை மமிதா பைஜூ. அரசியல்வாதியாக மாறியுள்ளதால், நடிகர் விஜய்யின் கடைசி படம் என கருதப்படும் 'ஜனநாயகன்' படத்தில் நடிக்கும் தனிப்பெருமையும் பெற்றுள்ளார். இவர் நடித்துள்ள 'டியூட்' இளசுகளுக்கு 'தீபாவளி ராக்கெட்!'

தினமலர் தீபாவளி மலருக்காக ரசிகர்களுக்கு 'ஹாய்' சொல்லி அளித்த பேட்டி...

தீபாவளிக்கு உங்க படம் வருவது பற்றி

தீபாவளி என்றாலே கொண்டாட்டம். இந்த நாளில் என் படம் வெளியாவது சூப்பர் கொண்டாட்டம். இந்த தீபாவளியை மறக்க முடியாததாக 'டியூட்' மாற்றும்.

சினிமா ஆசை வந்தது எப்படி?

டாக்டராக விரும்பினேன். சிறு வயதிலிருந்தே சினிமா, நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. படங்கள் பார்த்து கதை சொல்வேன். அதுவே என் சினிமா பாதையாக மாறியது.

விஜய்யின் 'ஜனநாயகன்' பட அனுபவம்?

உண்மையிலேயே ஒரு கனவு போல் உள்ளது. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் பெரிய ஸ்டார் என்றாலும் பணிவானவர், அடக்கமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.

உங்களை கொண்டாடிய பிரேமலு, சூப்பர் சரண்யா படங்கள் பற்றி?

இரண்டு படங்களும் என் இதயத்திற்கு நெருக்கமானது. என் சினிமா பயணத்தில் முக்கிய மைல்கற்கள். நிறைய அன்பையும், அங்கீகாரத்தையும் தந்தது. இந்த படங்கள் தான் என்னை ஒரு நடிகையாக தொடர வழிவகுக்கிறது. அதற்கு என்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

'ரெபல்-'க்கு பின் தமிழில் ஏன் இவ்வளவு இடைவெளி?

சிறு இடைவெளியாக தான் பார்க்கிறேன். அந்த நேரங்களில் நான் பல படங்களில் பிஸியாக இருந்தேன். எப்போதும் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்வது முக்கியம் என்று நம்புகிறேன்.

பிரதீப் ரங்கநாதனிடம் கற்றது?

ஒவ்வொரு காட்சியையும் அவர் பார்வையாளர்களின் பார்வையில் இருந்து பார்க்கும் விதம் எனக்கு பிடித்தது. அவரிடம் நான் கற்றதும் அது தான். படப்பிடிப்பு தளத்தில் அவரது பங்களிப்பு உற்சாகப்படுத்தியது.

சிறு வயது தீபாவளி எப்படி இருந்தது?

சின்ன வயதில் தீபாவளி கொண்டாட்டம் என்றால் ஒரே ஜாலி தான். வீட்டை விளக்குகளால் அலங்கரிப்பது, சுவையான உணவை விரும்பி சாப்பிடுவது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என கொண்டாட்டமாக இருக்கும். அதே உணர்வு இன்னும் தொடர்கிறது.

தமிழில் பிடித்த நடிகர்கள், இயக்குனர்கள்?

யாரை சொல்ல...யாரை தவிர்க்க! தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளனர். அவர்களிடம் மரியாதை உண்டு. ஒவ்வொரு கலைஞரும் தனித்துவமான படைப்பை தருகிறார்கள். அதனை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். அற்புதமான தமிழ் சினிமாவில் ஊக்கமளிக்கும் ரசிகர்களே பலம். இந்த திரை உலகில் நானும் ஒரு பகுதியாக இருப்பது அதிர்ஷ்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !