மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு
கடந்த
ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்'
திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
அதற்கு முன்பு இரண்டு சிறிய படங்களை இயக்கி இருந்த இயக்குனர் தருண்
மூர்த்தி தான் இந்த படத்தை இயக்கினார். அதன்பிறகு அவர் 'பிரேமலு' நாயகன்
நஸ்லேனை வைத்து 'டார்பிட்டோ' என்கிற படத்தை இயக்கி வருகிறார். அதை
தொடர்ந்து அவர் ஏற்கனவே இயக்கிய 'ஆபரேஷன் ஜாவா' படத்தின் இரண்டாம் பாகமாக
'ஆபரேஷன் கம்போடியா' என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்
பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டது.
மீண்டும் அவர் மோகன்லால் படத்தை இயக்குவார் என்று
சொல்லப்பட்டு வந்த நிலையில் நேற்று கொச்சியில் ஆறு மாதம் கழித்து நடைபெற்ற
தொடரும் படத்தில் பணியாற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழாவில்
மீண்டும் மோகன்லால் படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார் என்பது
அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. படத்தின் இயக்குனரான தருண்
மூர்த்திக்கு தயாரிப்பாளர் எம்.ரஞ்சித் விருதை வழங்கும்போது, இந்த விருதை
விட மோகன்லாலுடன் மீண்டும் ஒரு புதிய படம் தான் உங்களுக்கு இன்னும் மிக
சிறந்த விருதாக இருக்கும் என்று கூறினார். இதன் மூலம் மீண்டும் இந்த
தொடரும் கூட்டணி தொடர்ந்து பயணிப்பது உறுதியாகியுள்ளது.