உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா'

80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா'


தமிழ் சினிமா உலகின் முக்கியமான படங்களில் ஒன்று எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில், எம்எஸ் சுப்புலட்சுமி நடித்து வெளிவந்த படம் 'மீரா'. 1945ம் ஆண்டு தீபாவளி நாளான நவம்பர் 3ம் தேதி அப்படம் வெளிவந்தது. இன்றுடன் 80 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்தப் படத்தைத் தியேட்டர்களில் பார்த்த அனுபவம் கொண்ட யாரோ ஒரு சிலர்தான் இன்று இருக்க வாய்ப்புண்டு.

1949ம் ஆண்டு செக்கோஸ்லோவேகியா, பெரு, டொரான்டோ, வெனிஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பெருமை பெற்ற ஒரு திரைப்படம் 'மீரா'.

கிருஷ்ண பகவானின் தீவிர பக்தையான மீரா பற்றிய கதைதான் 'மீரா'. 1945ல் இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே 1936ல் 'மீராபாய்' என்ற ஒரு படமும், 1938ல் 'பக்த மீரா' என்ற மற்றொரு படமும் வெளிவந்தன.

1945ல் வெளிவந்த 'மீரா' படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் புகழைப் பெற்றார் எம்எஸ் சுப்புலட்சுமி. அப்படம் வெளிவருவதற்கு முன்பு 1938ல் வெளியான 'சேவாசதனம்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் சுப்புலட்சுமி. ஆனால், 'மீரா' தான் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்தது.

பிரபல எழுத்தாளர் கல்கி, கதை வசனம் எழுத, எஸ்வி வெங்கட்ராமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சித்தூர் வி நாகையா, செகளத்தூர் சாமா, கே சாரங்கபாணி, டிஎஸ் பாலையா, கேஆர் செல்வம், டிஎஸ் துரைராஜ், ஆர் சந்தானம் ஆகியோருடன் சிறிய வேடம் ஒன்றில் எம்ஜிஆர் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற 'காற்றினிலே வரும் கீதம்' பாடலை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கேட்டு ரசிக்கும் இசை ரசிகர்கள் உள்ளார்கள்.

1947 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. கவிக்குயில் சரோஜினி நாயுடு படத்தின் ஆரம்பத்தில் , படத்தையும் எம்எஸ் சுப்புலட்சுமியையும் பாராட்டிப் பேசியது இணைக்கப்பட்டது. படத்தின் பிரிவியு காட்சிக்கு நேரு, மவுண்ட் பேட்டன் இருவரும் இணைந்து வந்து படத்தைப் பார்த்துப் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !