இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி
நாகார்ஜுனா நடிப்பில் 36 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான படம் சிவா. ராம்கோபால் வர்மா அறிமுக இயக்குனராக இந்த படத்தை இயக்கி இருந்தார். இவர்கள் இருவரின் திரையுலக வரலாற்றில் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனை வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் 4 கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வரும் நவம்பர் 14ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு சமீபத்தில் பிரம்மாண்ட புரமோஷன் நிகழ்ச்சியும் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ராம் கோபால் வர்மா, “திரைப்பட இயக்குனராக என்னுடைய உண்மையான பிறப்பு என்பது நாகார்ஜுனாவால் கொடுக்கப்பட்டது. நாங்கள் இப்படி இந்தப் படத்தை 4k முறையில் ரிலீஸ் செய்வதற்காக மீண்டும் இங்கே ஒன்றிணைவோம் என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. நாகார்ஜுனா எப்போதுமே தொழில்நுட்பத்தை நம்புபவர் என்பதால் அவர் படைப்பு சுதந்திரத்தை மதிப்பவரும் கூட. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.