உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு”

பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு”

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஆஸ்தான இயக்குனர்களின் பட்டியலில் முதன்மையானவரும், 'பா' வரிசையில் அவரது பல்வேறு வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநருமான ஏ.பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து, மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த ஒரு மகத்தான 'பா' வரிசைத் திரைப்படமாக பார்க்கப்படும் திரைப்படம்தான் “பாவமன்னிப்பு”.

முதலில் இத்திரைப்படத்தை நடிகர் சந்திரபாபுவை வைத்து “அப்துல்லா” என்ற பெயரில் இயக்குநர் ஏ பீம்சிங் இயக்க ஆரம்பித்து, அது அவருக்கு முழு திருப்தியைத் தராததால், பின்னர் ஏ வி எம் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, நடிகர் சந்திரபாபுவின் சம்மதத்துடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நாயகனாக நடிக்க வைத்து, ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து தனது “புத்தா பிக்சர்ஸ்” தயாரிப்பு பதாகையின் கீழ் படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் இயக்குநர் ஏ பீம்சிங்.

1961ஆம் ஆண்டு வெளிவந்த “பாவமன்னிப்பு” திரைப்படத்தின் கதையும், படத்தின் பாடல்களும், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில், படத்தை தயாரித்திருந்த ஏ வி எம் நிறுவனம், இந்தப் படத்திற்கான விளம்பரத்தையும் ஒரு வித்தியாசமான முறையில், அதுவரை யாரும் செய்திராத வகையில் செய்து ஒரு புதுமையையும் படைத்திருந்தனர்.

அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ராட்சத ஹைட்ரஜன் பலூன் ஒன்றை, சென்னை சாந்தி தியேட்டருக்கு மேலே பறக்கவிட்டு, பலூனின் மீது ஏ வி எம் என ஆங்கிலத்தில் பெரிதாக எழுத்துக்கள் பொரிக்கப்பட்டு, அதன் வால் பகுதியில் “பாவமன்னிப்பு” என படத்தின் பெயர் இருக்குமாறு செய்து, இதற்காக பல சட்ட சிக்கல்களை எல்லாம் எதிர்கொண்டு, முறைப்படி அனுமதி பெற்று, பின் பலூனை பறக்கவிட்டு, படத்திற்கான விளம்பரத்தில் ஒரு புதுமையையும் படைத்திருந்தனர். விளம்பரத்திற்காக ஹைட்ரஜன் பலூன் பயன்படுத்தப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பினையும் பெற்றிருந்தது இந்த “பாவமன்னிப்பு”.

மேலும் கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை வார்ப்பில் உருவான இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்த நிலையில், தயாரிப்பு தரப்பினர் படத்தின் பாடல்களை வானொலி நிலையங்களில் பயன்படுத்தி, ஒரு போட்டி ஒன்றையும் அறிவித்திருந்தனர்.

போட்டியில் பங்கேற்போர் பாடல்களைக் கேட்டு, அவரவர் ரசனைக்கேற்ப படத்தின் மொத்த பாடல்களையும் ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தி எழுதி அனுப்ப வேண்டும். தயாரிப்பு தரப்பினர் தயாரித்து வைத்திருக்கும் பாடல்களின் தரப்பட்டியலும், போட்டியாளர் அனுப்பும் தரப்பட்டியலும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வெற்றியாளருக்கு ரூபாய் 10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியுமிருந்தனர். இதுவும் அன்றைய தமிழ் சினிமாவின் விளம்பர உத்தியில் ஒரு புதுமையாகப் பார்க்கப்பட்டது.

இவை தவிர, நடிகர் ஜெமினிகணேசனின் திரைப்படங்களில் அவரது பெரும்பாலான பாடல்களுக்குப் பின்னணி பாடி வந்தவர் பாடகர் ஏ எம் ராஜா. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களில் ஒன்றான “காலங்களில் அவள் வசந்தம்” என்ற பாடலுக்கு அவருக்காக பின்னணி பாடியவர் பி பி ஸ்ரீநிவாஸ். இந்தப் பாடல் பி பி ஸ்ரீநிவாஸின் திரையிசைப் பயணத்தில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தைத் தந்த பாடலாகவும் அமைந்திருந்தது. மேலும் சென்னை சாந்தி தியேட்டரில் வெளிவந்த முதல் சிவாஜி திரைப்படம் இந்த “பாவமன்னிப்பு” திரைப்படம்தான். இத்தனைப் பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய இந்த “பாவமன்னிப்பு” திரைப்படம் தமிழ் திரையுலகின் தரத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு போற்றுதலுக்குரிய திரைப்படம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !