பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை
புராணம் மற்றும் இதிகாச கதைகளை நவீன சமூக கதையாக மாற்றி பல படங்கள் வந்துள்ளது. குறிப்பாக மணிரத்னம் இயக்கும் படங்களில் பெரும்பாலானவற்றில் புராண கதைகளின் தாக்கம் இருக்கும். குறிப்பாக 'தளபதி' படம் துரியோதனன், கர்ணன் நட்பின் கதை, 'ராவணா' படம் ராமன், ராவணனின் கதை. இதுபோன்ற படங்களுக்கு முன்னோடி 'டாக்டர் சாவித்ரி' என்ற படம்.
எமனின் பிடியில் இருந்து கணவன் சத்யவானை காப்பாற்றினாள் என்பதுதான் சத்யவான் சாவித்திரியின் கதை. இந்த இதிகாச கதை 1941ம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. ஒய்.வி. ராவ் கணவராகவும், பிரபல இந்தி மற்றும் மராத்தி நடிகை சாந்தா ஆப்தே சாவித்திரியாகவும், எம்.எஸ். சுப்புலட்சுமி நாரதராகவும் நடித்திருந்தனர்.
இதே கதை சமூக கதையாக மாற்றப்பட்டு 1955ம் ஆண்டு 'டாக்டர் சாவித்ரி' என்ற பெயரில் வெளியானது. அஞ்சலி தேவி, எம்.என். ராஜம், எஸ். பாலசந்தர், சேருகளத்தூர் சாமா, டி. பாலசுப்பிரமணியம், எம்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், பி.ஆர். பந்துலு, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோர் நடித்தார்கள்.
இந்த படத்தில் டாக்டர் சாவித்ரி (அஞ்சலிதேவி) ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்யும் டாக்டர். அவரது கணவர் ஒரு வங்கி அதிகாரி. இவர்கள் இருவரும் ஒரு தம்பதிகளுக்கு உதவி செய்யப்போய் அது பிரச்னையாகி ஒரு கொலையும் நடந்து விடுகிறது. அந்த கொலை பழி சாவித்ரியின் கணவரின் மீது விழுகிறது. டாக்டராக இருந்த சாவித்ரி துப்பறிவாளராக மாறி உண்மையான கொலையாளியை கண்டுபிடித்து கணவனை மீட்பதுதான் கதை.
ஆர்.எம்.கே இயக்கிய இந்தப் படத்தில், ஜி. ராமநாதன் இசையமைத்தார். அருணா பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.