பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி அவரது மகனை இயக்கிய ஒரு நிகழ்வு 'சாதனை' படத்தில் நடந்தது. படத்தின் கதைப்படி சிவாஜி ஒரு சினிமா இயக்குனர். சலீம் அனார்கலியின் காதல் கதையை படமாக்குவதே இவரது கனவுத் திட்டம்.
அனார்கலியின் பாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய ஒரு பெண்ணைத் நீண்டகாலம் தேடுகிறார். இறுதியில் ஒரு பிச்சைக்காரியை (நளினி) அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமானவளாக தேர்ந்தெடுக்கிறார்.
சிவாஜியின் மனைவி கே. ஆர். விஜயா, சிவாஜி, நளினியின் உறவை சந்தேகிக்கத் தொடங்குகிறார். இதை அறிந்த நளினி, தன்னால், தன் இயக்குனரின் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படக்கூடாது என்று கருதி சிவாஜியிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு அனார்கலியாக நடிக்க தகுதியான ஒரு பெண்ணை மீண்டும் கண்டுபிடிக்கிறார். தனது மகன் பிரபுவை சலீம் கேரக்டருக்கு தேர்வு செய்கிறார். இருவரையும் வைத்து அனார்கலி கதையை மீண்டும் படமாக்குகிறார்.
அவர்களுக்கு நடிப்பு சொல்லித் தந்து இயக்குகிறார். அனார்கலியாக நடிக்கும் பெண், முன்பு சிவாஜியை விட்டு பிரிந்த நளினியின் மகள், அவரை பிரபு நிஜமாகவே காதலிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இதில் சிறப்பு என்னவென்றால் படம் இயக்காத சிவாஜி ஒரு இயக்குனராக பிரமாதமாக நடித்தார். குறிப்பாக அவர் இதில் கே.பாலச்சந்தரை நினைவில் வைத்து நடித்ததாகவும் கூறுவார்கள். ஏ.எஸ்.பிரகாசம் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.