ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ்
பான் இந்தியா நடிகர் என்று உண்மையிலேயே சொல்லும் அளவிற்கு நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதங்களில் தெலுங்கில் ‛குபேரா', தமிழில் ‛இட்லி கடை' ஆகிய படங்கள் வெளியாகின. அடுத்ததாக ஹிந்தியில் அவர் நடித்து வரும் ‛தேரே இஸ்க் மெய்ன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஹிந்தியில் தனுஷை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வரும் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்த படத்தை இயக்கியுள்ளார். கிர்த்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுசிடம் காதல் என்றால் என்ன என்கிற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு முதலில் ‛‛எனக்கு தெரியாது'' என்று தனுஷ் பதிலளித்தாலும், ‛நீங்கள் ரொம்பவே இளமையாக இருக்கிறீர்கள் அதனால் நீங்கள் காதலை பற்றி கூறுவதற்கு தகுதியானவர் தான்' என்று கூட்டத்திலிருந்து ஒருவர் அவரை உற்சாகப்படுத்துகிறார்.
இதனை தொடர்ந்து புன்னகையுடன் பேசிய தனுஷ், “காதல் என்பது மிகைப்படுத்தப்பட்ட மற்றொரு உணர்ச்சி என்று தான் நான் நினைக்கிறேன்” என்று கூறினார். உடனே அருகில் இருந்த கிர்த்தி சனோன், “ஆனால் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இவர் சொல்வதற்கு முற்றிலும் மாறுபட்டது” என்று கூறினார். அதே சமயம் தனுஷ், “இந்த படத்தின் கதாநாயகன் சங்கர் போன்றவன் அல்ல நான் என்று ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன்” என்று கூறினார்.