இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு
கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இ.வி.கணேஷ்பாபு இயக்கிய 'ஆநிரை' என்ற குறும்படம் இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக தேர்வுசெய்யப்பட்டது. முதல் நாளில் இக்குறும்படம் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் இ.வி.கணேஷ்பாபுவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இதுப்பற்றி கணேஷ்பாபு கூறுகையில், ''ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வேண்டும் என்பது கனவு. அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம் என் வாழ்வில் அற்புதமான தருணம். இரவு பகலாக உழைத்த எனது படக்குழுவுக்கு நன்றி.
ஹிந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுபம் கேர், படத்தின் பலகாட்சிகளிலும் கைதட்டி ரசித்தார். பணம்தான் பெரிது என்று நினைக்கும் இந்த உலகில் அன்புதான் பெரிது என்று இப்படம் காட்டுகிறது என்றும் அவர் பாராட்டினார். அதேபோல், ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணியும் என் கதையை பாராட்டினார். மேலும் வெளிநாட்டு திரைக்கலைஞர்களின் பாராட்டுக்கள் என் திரைப்பயனத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது'' என்றார்.