‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு
டியூட் படத்தில் உள்ள இளையராஜாவின் ‛கருத்த மச்சானை' பாடலை நீக்க சென்னை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛டியூட்'. இளைஞர்களை கவர்ந்த இந்த படம் ரூ.100 கோடி வசூலை குவித்தது. இதில், தன் அனுமதியின்றி, 'கருத்த மச்சான், நுாறு வருஷம்' ஆகிய இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என, இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில் குமார் முன் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், 'அனுமதியின்றி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பாடலுக்கான உரிமை என்னிடம் உள்ளதால், படத்தில் இடம்பெற்ற பாடலை நீக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், 'பாடல்களை பயன்படுத்த சோனி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'திரையரங்கு மற்றும் ஓ.டி.டி., ஆகியவற்றில் படம் வெளியாகும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது வழக்கு தாக்கல் செய்தது ஏன்' என, இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இப்போது இதில் இடம்பெற்ற இளையராஜாவின் ‛கருத்த மச்சான், நுாறு வருஷம்' பாடல்களை நீக்க வேண்டும் சென்னை, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது பாடலை நீக்க 7 நாள் படக்குழு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.