பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி
இயக்குனர் ஸ்ரீதரும் சிவாஜியும் மிக நெருங்கிய நண்பராக இருந்தார்கள். படங்கள் இயக்கிக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது, இதற்காகவே 'அமரதீபம்' என்ற ஒரு கதை எழுதி வைத்திருந்தார். அவர் அதை தனது நண்பன் பிரகாஷ் ராவை இயக்க வைத்து அவரை இயக்குனராக விரும்பினார்.
அமரதீபம் கதை எழுதும் போது அதில் நாயகன் சிவாஜி தான் என்று அவர் முடிவு செய்திருந்தார். நாயகிகளாக பத்மினியும், சாவித்திரியும் தேர்வானார்கள். ஆனால் திட்டமிட்டபடி படத்தை தொடங்க முடியவில்லை. காரணம் படத்திற்கு நிதி உதவி செய்வதாக வாக்களித்திருந்த பைனான்சியர் பின்வாங்கியதால் படத்தை நிறுத்த வேண்டிய நிலை வந்தது.
ஸ்ரீதர் தன்னிடமிருந்த ஐந்தாயிரம் ரூபாயை முதல் முதலீடாக போட்டு தனது நண்பர்களான கோவிந்தராஜன், சுந்தர்ராஜனை இணை தயாரிப்பாளர் ஆக்கினார். அதன் பிறகு சிவாஜியை சந்தித்து ஸ்ரீதர் பொருளாதார சிக்கலை சொன்ன போது நான் சம்பளமே வாங்காமல் நடிக்கிறேன் படம் வெளிவந்து வெற்றி பெற்று அந்த வசூலில் எனது சம்பளத்தை தாருங்கள் என்று கூறிவிட்டார்.
அதோடு மட்டுமல்லாமல் சிவாஜியின் வேண்டுகோளை ஏற்று நடிகைகள் பத்மினி, சாவித்திரியும் சம்பளம் வாங்காமலே படத்தில் நடித்தார்கள். படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது சிவாஜி, சாவித்திரி, பத்மினி ஆகியோருக்கு பேசிய சம்பளத்தை விட அதிகமான தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது.