மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இவர் கதாநாயகியாக புகழின் உச்சியில் இருந்த சமயத்தில் பிரபல மலையாள வில்லன் நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். மீண்டும் இரண்டாவதாக ஒரு திருமணமும் செய்து கொண்டார். இந்த நிலையில் முதல் திருமணத்தின் போது தனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதில் அவர் கூறும்போது, “முதல் திருமணம் நடைபெற்று எனது கணவரின் வீட்டில் நுழைந்தபோது நான் என் வீட்டிலும் எனது சுற்றத்தார் வீடுகளிலும் பார்த்த எந்த சூழ்நிலையும் அங்கே எனக்கு தென்படவில்லை. காரணம் அங்கே ஒவ்வொருவரும் ரொம்பவே மாடர்னாக இருந்தார்கள். குறிப்பாக குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், குழந்தைகள் முதல் கொண்டு தங்கள் தாயுடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். என்னதான் அதை தவிர்க்க நினைத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நானும் அந்த சூழலுக்கு என்னை பொருத்திக் கொள்ள வேண்டியதாக ஆகிவிட்டது. இதை தவிர்ப்பதற்காகவே மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினேன்” என்று கூறியுள்ளார்.