மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு கதை நாயகனாக நடிக்கும் படம் 'கெணத்த காணோம்'. இதில்கிராமத்து கோயில் பூசாரியாக அவர் வருகிறார். லவ்லின் ஹீரோயின். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. இவர் சமீபத்தில் காலமாகிவிட்ட நிலையில் அவரின் நண்பர்கள் இந்த படத்தை வெளியே கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய யோகிபாபு, ''ஒரு கிடாயின் கருணை மனு படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது ஹீரோவா என பயந்துபோய் நடிக்கவில்லை. ஒரு சின்ன கேரக்டரில் நடிக்கலாம் என்றால் அதுவும் நடக்கவில்லை. பின்னர் கெணத்தை காணோம் படத்தில் என்னை நடிக்க வைத்தார் 'காக்கா முட்டை' மணிகண்டன் உதவியாளர் சுரேஷ்.
நானும் லொள்ளுசபா ராம் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி நிறைய கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ச்சியாக உதவி இயக்குனர்களுக்கு உதவத் தயார். இப்போது கூட என் கதையில் ஒரு உதவி இயக்குனர் ஒரு படம் இயக்கி வருகிறார். சுரேஷ் சங்கையா குடும்பத்திற்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன்'' எனக் கூறிவிட்டு மேடையிலே செக் எழுதி கையெழுத்து போட்டு அவர் மனைவியிடம் கொடுத்தார்.
எவ்வளவு தொகை என இரு தரப்பும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் ஒரு லட்சத்துக்கு மேல் என்று கூறப்படுகிறது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கிராமத்தில் கிணறு தோண்டும் போது என்ன கிடைக்கிறது. அதனால் என்ன பிரச்னை என்ற ரீதியில் கதை செல்கிறது.