உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார்

'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார்

கடந்த 27ம் தேதி வெளியான படம் '4த் புளோர்'. மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் ஏ.ராஜா தயாரிக்க, எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார். ஆரி அர்ஜுன், தீப்ஷிகா, பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தியேட்டர்கள் தர மறுப்பதாகவும், மால் தியேட்டர்கள் படத்தை புறக்கணிப்பதாகவும் இதனால் தயாரிப்பாளர் பெரும் நஷ்டசத்தை சந்தித்திருப்பதாகவும் ஆரி புகார் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மால்களில் இந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுக்க மறுக்கிறார்கள். சண்டை போட்டு தியேட்டர் கேட்டுக் கொண்டிருக்கிறோம். காரணம் கேட்டபோது, நீங்கள் செய்த விளம்பரம் போதவில்லை என்கிறார்கள்.

'தாய்கிழவி' படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள். அதனால் தியேட்டர்கள் கொடுக்கிறோம் என்றார்கள். தாய்கிழவி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் விளம்பரம் செய்யும் அளவுக்கு பொருளாதார வலிமையும், சக்தியும் இருக்கிறது. ஆனால் என் படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் சொந்த தொழில் செய்து சம்பாதித்த பணத்தில், அவரால் இயன்றளவு செலவு செய்து படத்தைத் தயாரித்திருக்கிறார். எந்த அடிப்படையில் தியேட்டர்கள் வழங்கப்படுகின்றன என்பது புரியவில்லை.

எந்த படம் ஓட வேண்டும், ஓடக்கூடாது என்பதை தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல, இப்போது மால்களும் தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன. அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால், புதுமுகங்களும் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களும் எப்படி முன்னேறுவது? படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என்கிறார் ஆரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !