ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிலை திறப்பு
இந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பாடகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞர். இந்திய மொழிகள் அனைத்திலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சமயத்தில் மரணம் அடைந்தார்.
சென்னையில் அவர் வசித்து வந்த தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது மகன் அவருக்கு மணி மண்டபம் கட்டி உள்ளார். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று திறந்து வைத்தார்.
விழாவில் அரியானா முன்னாள் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கானா அமைச்சர் ஸ்ரீதர் பாபு, பா.ஜ., மாநில தலைவர் ராமச்சந்திரராவ் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.