ஆஸ்கர் விருதுக்கு 'ஹோம் பவுண்ட்' தேர்வு
உலகின் மிகப் பெரிய திரைப்பட விழாவான 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம்தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது.
ஆஸ்கருக்கு தனிப்பட்ட முறையில் பல படங்கள் இந்தியாவில் இருந்து போட்டியிட்டாலும், அரசின் சார்பில் ஒரு படம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும், அந்த படத்தை தேர்வு செய்ய தனியாக குழுவும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியாவில் இருந்து 'ஹோம் பவுண்ட்' படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் தகுதிப் பட்டியலில் தேர்வாகி உள்ளது. இறுதி பட்டியல் வருகிற ஜனவரி 22ம்தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
'ஹோம் பவுண்ட்' படத்தை நீரஜ் கய்வான் இயக்கி உள்ளார். இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா நடித்துள்ளனர். இந்தப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைக் குவித்து வருகிறது. முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம், சமீபத்தில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு அங்கும் பாராட்டுகளைப் பெற்றது.
2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகத் தங்கள் ஊருக்குப் பயணம் செய்த இரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த படம்.
மதத்தையும், சாதியையும் கடந்த ஒரு புனிதமான நட்பையும், அதே சமயம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வலியையும் இந்த படம் பேசியிருந்தது.