உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா

தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் பக்கமும் போய் நடித்து வருவார். அவர் நடிக்கும் எந்த ஒரு படத்தின் விழாவிற்கும் அவர் வர மாட்டார். படம் வெளியாகும் போது அந்தப் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். படங்களில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே இவற்றை அவர் குறிப்பிட்டே கையெழுத்து போடுவார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், தற்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தின் புரமோஷனுக்காக வீடியோ ஒன்றில் பேசியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கப் போவதை ஏழு மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுத்தான் அறிவித்தார்கள். அந்த வீடியோவில் நயன்தாரா நடித்துக் கொடுத்தார். அது அப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இன்னும் பத்து நாட்களில் படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று வெளியான புரமோஷன் வீடியோவிலும் நயன்தாரா நடித்துக் கொடுத்துள்ளார். அடுத்து இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வாரா என்றும் கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழில் அதிகப் படங்களில் நடித்துள்ள நயன்தாரா அந்தப் படங்களுக்கு இப்படி எதுவும் செய்யாத நிலையில், தெலுங்கில் மட்டும் இப்படி செய்து கொடுப்பது இங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !