2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'!
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 99வது படம் 'மகுடம்'. விஷால் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஈட்டி, ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவிஅரசு இயக்கி வந்த நிலையில் திடீரென்று அவருக்கும், விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மகுடம் படத்தில் இருந்து ரவிஅரசு வெளியேறினார். அதனால் விஷாலே மகுடம் படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
மூன்று விதமான கெட்டப்பில் அவர் நடித்திருக்கும் இந்த படம் கப்பல் துறைமுகத்தை சார்ந்த கதைக்களத்தில் உருவாகிறது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தை யொட்டி இன்று மகுடம் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலிஷான தோற்றத்தில் உள்ளார் விஷால். இப்படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.