ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ்
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ் கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த்தின் 173வது பட அறிவிப்பு வந்தது. இதை முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் சுந்தர் சி விலகினார். இதையடுத்து ‛பார்க்கிங்' பாலகிருஷ்ணன், ‛மகாராஜா' நித்திலன் சாமிநாதன், வினோத், ‛டிராகன்' அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இறுதியாக அஸ்வத் மாரிமுத்து இயக்க முடிவானதாக தகவல் வந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‛டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இன்று(ஜன., 3) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு, அதாவது 2027 பொங்கலுக்கு வெளியாகும் என இன்று வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
சிபி கூறுகையில், ‛‛சில நேரங்களில், வாழ்க்கை கனவுகளையும் தாண்டி இன்னும் பிரம்மாண்டமாக மாறும். உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற எனது இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்து உழைப்பேன்'' என்கிறார்.