‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு
‛லொள்ளுசபா' காமெடி நிகழ்ச்சியில் ஒல்லியான தேகத்துடன் காமெடி பண்ணி வந்தவர் வெங்கட்ராஜ். இவர் நடிப்பு, டான்ஸ், டயலாக்கிற்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. ‛கலக்கப்போவது யாரு' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு பெற்று பிரபலமானார். ‛மனிதன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா' உட்பட பல படங்களில் நடித்தார்.
பல காமெடி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். சென்னை கிண்டி அருகே வசித்து வந்த இவருக்கு நுரையீரலில் பிரச்னை ஏற்பட, பல மாதங்களாக அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், கீழே விழுந்து காலில் அடிபட்டுள்ளது.
இந்நிலையில் மூச்சுதிணறல் காரணமாக இன்று சென்னையில் காலமானார். நாளை வேளச்சேரியில் அவரின் இறுதி சடங்குகள் நடக்க உள்ளன. வெங்கட்ராஜ்க்கு வயது 68.இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவரின் சிகிச்சை செலவுக்கு கேபிஒய் பாலா, லொள்ளுசபா சுவாமிநாதன், ஜீவா உட்பட பலர் உதவி இருக்கிறார்கள். இப்போதும் லொள்ளுசபா டீமுக்கு அவர் குடும்பத்தினர் சார்பில் தகவல் அனுப்ப பட்டுள்ளதாம். லொள்ளுசபா நிகழ்ச்சியில் நடித்த ஆண்டனி, சேஷூ ஆகியோரை தொடர்ந்து வெங்கட்ராஜ் மறைந்துள்ளது, அந்த நிகழ்ச்சி ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.