பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பாலா. 'சேது' படம் மூலம் விக்ரமிற்கும், 'நந்தா' படம் மூலம் சூர்யாவுக்கும், 'நான் கடவுள்' படம் மூலம் ஆர்யாவுக்கும் திருப்புமுனை தந்தவர். அவரது இயக்கத்தில் கடந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த 'வணங்கான்' வரவேற்பைப் பெறவில்லை.
அதற்கடுத்த படம் குறித்து இயக்குனர் பாலாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இதனிடையே, புத்தாண்டு அன்று அவரும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலை கோவிலில் சாமி கும்பிட்டது குறித்து பேசப்பட்டது.
கடந்த ஓரிரு மாதங்களாக தனது அடுத்த படம் குறித்த ஆலோசனையை திருவண்ணாமலையில் நடத்தி வந்தாராம் பாலா. அவர் அடுத்து தயாரிக்க உள்ள படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதால் அது குறித்து பேசவே அவர் திருவண்ணாமலை சென்றதாகத் தெரிகிறது.
ஐஸ்வர்யா கடைசியாக இயக்கிய 'லால் சலாம்' படம் 2024ல் வெளிவந்தது. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பேசப்படவில்லை. தற்போது ஹீரோக்களுக்காக இல்லாமல் கதைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் ஒரு கதையை எழுதி இருக்கிறாராம் ஐஸ்வர்யா. அந்தக் கதையைக் கேட்ட பாலா, அவரே தயாரிக்க முன் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரலாம். அதற்கடுத்து பாலா இயக்க உள்ள படத்தின் அறிவிப்பும் வரும் என்கிறார்கள்.