ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண்,சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வா வாத்தியார்'. நாளை(ஜன., 15) வெளியாக உள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்திக் பேசியது...
பல தடங்கலுக்கு பிறகே வா வாத்தியார் வெளியாகிறது. என் முதல் படமே(பருத்திவீரன்) பட தடங்கலை கடந்தே வெளியானது. இரண்டாவது படமும் (ஆயிரத்தில் ஒருவன்)அப்படியே. தடங்கல்கள் எனக்கு புதிதல்ல. ஒரு நல்ல கதை தனக்கு தேவையானவற்றை தானே அமைத்துக்கொள்ளும் என்பார்கள். அதை நம்பிவிட்டால் நிம்மதியாக இருப்போம். நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை குறித்து கவலைப்படக் கூடாது.
எம்.ஜி.ஆர் மறைந்து பல வருடங்கள் ஆனாலும், அவரைப் பற்றிய நினைவுகள் இன்னும் அழுத்தமாக உள்ளது. இன்று எம்ஜிஆர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினோம் . இன்னும் அவரைப்பற்றி பேசுகிறோம். ஜனநாயகன் தாமதம் ஆனாலும், அது சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புகிறேன். இந்த பட இயக்குனர் படம் பிரச்னை இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டும் என வேண்டி திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று இருக்கிறார்.
எம்ஜிஆர் ஒரு சூப்பர் ஹீரோதான். அவரை இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியுடன் கொண்டு வந்து இருக்கிறோம். இந்த படத்துக்கு பிரச்னைகள் வந்தபோது எல்லாம் சரியாகும். மன அழுத்ததை தலைக்கு ஏற்ற வேண்டாம். உடல் நிலை பாதிக்கப்பட கூடாது என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். இந்த படம் வெளியாக அண்ணன் சூர்யா உட்பட பலர் உதவி செய்தார்கள். அழகான ஹீரோயின் கிர்த்தி ஷெட்டியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்''.
இவ்வாறு அவர் கூறினார்.