உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ்

ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ்


மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக 'சர்வம் மாயா' திரைப்படம் வெளியானது. அகில் சத்யன் இயக்கிய இந்த படம் ஹாரர் சென்டிமென்ட் காமெடி படமாக உருவாகி இருந்தது. ஆச்சரியமாக கடந்த சில வருடங்களாகவே நிவின்பாலிக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி படம் எதுவும் அமையாத நிலையில் இந்த சர்வம் மாயா திரைப்படம் 100 கோடி வசூலித்து மீண்டும் நிவின்பாலியை புத்துணர்ச்சியுடன் திரையுலகிற்கு திருப்பி அழைத்து வந்துள்ளது.

இந்த நிலையில் அவர் இதற்கு முன்னதாகவே நடித்து முடித்து இருந்த 'பேபி கேர்ள்' திரைப்படமும் சர்வம் மாயா வெற்றியை தொடர்ந்து விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வம் மாயா டிசம்பரில் தான் வெளியானதால் பிப்ரவரியில் பேபி கேர்ள் படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூட்டோடு சூடாக வரும் ஜனவரி 23ம் தேதியே பேபி கேர்ள் படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் நிவின்பாலி மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அருண் வர்மா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். பிரபலமான கதாசிரியர்களான பாபி, சஞ்சய் இந்த படத்திற்கு கதை எழுதி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !