அபிஷனின் தயக்கத்தை உடைத்த ரஜினியின் வார்த்தைகள்
'டூரிஸ்ட் பேமிலி' படத்தை இயக்கி பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் அபிஷன் ஜீவிந்த். தனது முதல் படத்திலேயே வெற்றி பெற்ற அபிஷன், தற்போது அவரது உதவி இயக்குனர் மதன் இயக்கத்தில் 'வித் லவ்' எனும் காதல் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா தயாரித்துள்ளார். பிப்.,6ல் படம் ரிலீசாகிறது.
இப்பட நிகழ்ச்சியில் பேசிய அபிஷன் ஜீவிந்த், ''என் நன்றி அனைத்தும் ரஜினிகாந்த் சாருக்கே. நான் நடிக்கலாமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்த காலத்தில், ரஜினிகாந்த் என்னை அவரின் வீட்டிற்கு அழைத்தார். அப்போது எனது தயக்கம் பற்றி சொன்னேன், அவர், 'நீ நடி கண்ணா' என சொன்னார். அவரின் வார்த்தையிலேயே என் அனைத்து தயக்கமும் உடைந்துவிட்டது.
'என்ன ஆனாலும் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும்' என அப்போது முடிவு செய்தேன். டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு அப்புறம் எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது. அதேபோல், இந்த 'வித் லவ்' படம் வெளியானபிறகு இயக்குனர் மதனுக்கும் அதைவிட இரட்டிப்பு மரியாதை கிடைக்கும்'' எனப் பேசினார்.