தூய்மை பணியாளருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டிய ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க போகிறார். சமீபத்தில் தனது மதுரை ரசிகர் ஒருவர் பல ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு பரோட்டோவை வழங்கி வந்தவருக்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இப்போது தூய்மை பணியாளர் பத்மா என்ற பெண்ணை அழைத்து பாராட்டி உள்ளார்.
அப்படி என்ன செய்தார் பத்மா...
தூய்மை பணியாளரான பத்மா, சென்னை, தி நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு பை ஒன்றில் தங்க நகைகள் இருப்பதை கண்டார். பின்னர் தனது மேலதிகாரியின் உதவியுடன் போலீஸில் அந்த நகைகளை ஒப்படைத்தார். அந்த பையில் சுமார் 45 லட்சம் மதிப்பிலான 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. அந்த நகை சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக பத்மாவை பலரும் பாராட்டினர். முதல்வர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் அளித்து பாராட்டினார்.
இந்நிலையில் இவரின் செயலை அறிந்த நடிகர் ரஜினி தனது வீட்டிற்கு பத்மா மற்றும் அவரது குடும்பத்தாரை வழ வழைத்து பாராட்டினார். பத்மாவிற்கு சால்வை அணிவித்து தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக அளித்தார். இது வைரலானது.