2வது சிம்பொனி: அப்டேட் கொடுத்த இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா, 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, 'வேலியன்ட்' சிம்பொனியை, லண்டனில் கடந்தாண்டு அரங்கேற்றி அசத்தினார். சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த சிம்பொனியை எழுதப்போவதாகவும் அறிவித்திருந்தார் இளையராஜா.
இந்த நிலையில், இன்று தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா வெளியிட்ட பதிவில், 'பிப்ரவரி 3, 2026ம் தேதியான இன்றுடன் இந்த புதிய ஸ்டுடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும், எனது இரண்டாவது சிம்பொனியின் எழுத்துப் பணியும் கிட்டத்தட்ட முடிந்தது' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் 2வது சிம்பொனியை முடித்து, விரைவில் அதையும் அரங்கேற்றம் செய்து சாதிக்க உள்ளார்.