உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'

வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'

தமிழ் சினிமாவில் இன்றைய சூழ்நிலையில் ஒரு சிறப்பான வெற்றி கிடைக்க முன்னணி நடிகர்களே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கடந்த வருடம் வெளியான சில படங்களே சாட்சி.

கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் 150 கோடி வசூலித்த 'டிராகன்' படத்தையும், தீபாவளிக்கு 100 கோடி வசூலித்த 'டியூட்' படத்தையும் கொடுத்து ஒரே ஆண்டில் இரண்டு 100 கோடிப் படங்களைக் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த வருடமே அவர் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் வந்திருக்க வேண்டும். அந்தப் படத்தையும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்து, பின் அதே சமயத்தில் 'டியூட்' படமும் போட்டியாக அறிவிக்கப்பட்டதால் தங்களது படத்தைத் தள்ளி வைத்தார்கள்.

அதன்பின் டிசம்பர் 18 வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் அப்போதும் படம் வெளியாகவில்லை. அன்றைய தினத்தில் வெளியிட முடியவில்லை, தள்ளி வைக்கிறோம் என்று கூட அந்தப் படம் சம்பந்தப்பட்ட யாரும் அறிவிக்கவேயில்லை.

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என படத்திற்குப் பெயர் வைத்துள்ளதால் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 அல்லது ஒரு நாள் முன்னதாக வெள்ளிக்கிழமை பிப்ரவரி 13ல் படம் வெளிவந்தால் பொருத்தமாக இருக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், படக்குழுவோ இதுவரையில் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளார்கள் என்று கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளரான லலித்குமார், இயக்குனர் விக்னேஷ் சிவன், இரண்டு ஹிட் கொடுத்த நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஆகியோரில் ஒருவராவது இந்தப் படம் குறித்த உண்மை நிலையைச் சொல்லலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !