உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பொன்னியின் செல்வன் ஆசையை இப்படி தீர்த்துக் கொண்டார் எம்ஜிஆர்

பிளாஷ்பேக்: பொன்னியின் செல்வன் ஆசையை இப்படி தீர்த்துக் கொண்டார் எம்ஜிஆர்

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வனை' திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால் அவரால் எடுக்க முடியவில்லை. என்றாலும் ராஜராஜ சோழன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை வேறொரு படத்தின் மூலம் தீர்த்துக் கொண்டார். அந்தப் படம் 'ராஜராஜன்'. 1957ம் ஆண்டு வெளிவந்தது.

இந்தப் படத்தில் அவர் சோழ இளவரசர் ராஜராஜனாக நடித்தார். கதாபாத்திரப் பெயரும், அவரது நாட்டின் பெயரும் தவிர வேறு எதுவும் சோழ வரலாறை பற்றியதல்ல . கற்பனையான ராஜ ராணி கதைதான். எம்ஜிஆர் ரசிகர்கள் எதிர்பார்த்த போர்க்காட்சிகள், சண்டைக் காட்சிகள், மர்மம், பழிவாங்கல், காதல், எல்லாம் இருந்தது.

கதைப்படி வில்லன் பி.எஸ்.வீரப்பா, சோழ நாட்டின் தளபதி. பெயர் நாகவேலன். அவர் சோழ இளவரசன் ராஜராஜனை சிறை வைத்து, நாட்டை கைப்பற்ற பார்ப்பார். நாகவேலனின் தங்கை பிரியமோகினி ராஜராஜன் தப்பித்துச் செல்ல உதவி செய்வாள். ஏமாற்றமடைந்த நாகவேலன், இளவரசன் ராஜராஜன் வேடனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் வேடனும், அவன் கூட்டமும் சேர்ந்து இளவரசனை அடித்துக் கொன்றதாக கதைகட்டிவிடுவான்.

இப்படியான நிலையில் ராஜராஜன் தனது நாட்டை மீட்டு எப்படி மன்னர் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. நாயகி பத்மினி, எம்ஜிஆரின் காதலியாகவும், லலிதா எம்ஜிஆரை ஒரு தலையாய் காதலிப்பவராகவும் நடித்திருந்தார். படத்தில் 11 பாடல்கள் இடம்பெற்று அனைத்தும் ஹிட்டானது . குறிப்பாக எம்ஜிஆர் பூஜாரி வேடம் அணிந்து பாடிய பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. படமும் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !