உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?


வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடித்த 'ஜனநாயகன்' படம் ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியவாதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம்.

விசாரணை நடந்து சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, வழக்கை தள்ளி வைத்தது. அதற்குள் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டது. அங்கு வழக்கை தள்ளுபடி செய்து மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகும்படி சொன்னது. இங்கு நீதிமன்ற அமர்வு மீண்டும் வழக்கை விசாரித்து, தனி நீதிபதியே வழக்கைத் தொடர உத்தரவிட்டது.

ஜனவரி 27 வழங்கப்பட்ட உத்தரவுக்குப் பின் வழக்கு நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை. கடந்த பத்து நாட்களாகக் காத்திருந்த நிலையில் வழக்கை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து மனு தாக்கல் செய்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு வாபஸை ஏற்றுக் கொண்டது நீதிமன்றம்.

இதனால், தணிக்கை வாரியம் ஆரம்பத்தில் சொன்னபடி மீண்டும் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்க்க வேண்டும். அவர்கள் பார்த்து சொல்லும் திருத்தங்களைச் செய்தால் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு இப்படத்தை வெளியிட்டாக வேண்டும். அறிவிப்பு வந்துவிட்டால் தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட முடியாது. விஜய் அரசியல் கட்சியின் தலைவர் என்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவேதான் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு வந்துள்ளது.

இப்போது வழக்கை வாபஸ் பெறுவதற்குப் பதிலாக, வழக்கை போடாமல் இருந்திருந்தால் கடந்த மாதத்திலேயே படம் வெளியாகி இருக்கும். இந்த வழக்கால் ஒரு மாதம் போய் விட்டது. அடுத்து தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவது எப்படி நடக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உள்ளது. விதிகள், நடைமுறைகள்படி பார்த்தால் 20 நாட்களாவது ஆகும் எனத் தெரிகிறது. அதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

அதே சமயம் அடுத்த 10 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதனால், படம் பிப்ரவரி 20ம் தேதி வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !