உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ

தமிழ் சினிமா பால்களில் அதிகப் பார்வைகளை யு டியூபில் பெற்ற பாடலாக 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' வீடியோ பாடல் இருக்கிறது. 2019ம் ஆண்டு யுடியூப் தளத்தில் வெளியாகிய அந்தப் பாடல் கடந்த 7 ஆண்டுகளில் 1728 மில்லியன் பார்வைகளை, அதாவது 172 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 1000 மில்லியன் பார்வைகளைக் கடந்த தமிழ் சினிமா பாடல் என்று வேறு எதுவும் இல்லை.

'ரவுடி பேபி' வீடியோ பாடல் வெளிவருவதற்கு சுமார் ஒரு மாதம் முன்னதாக அந்தப் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஆனால், அந்த லிரிக் வீடியோ இப்போதுதான் யு டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் வீடியோ பாடல் ஒரு மாதத்திலேயே 100 மில்லியன் பார்வைகளை 2019ல் கடந்தது. ஆனால், லிரிக் வீடியோ 100 மில்லியனைக் கடக்க 7 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

ரவுடி பேபியின் வீடியோ பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம் அதிலுள்ள நடனம். தனுஷ், சாய் பல்லவி இருவருமே போட்டி போட்டு அசத்தலாக ஆடியிருப்பார்கள். அதனால்தான் இன்று வரையிலும் தொடர்ந்து நாள்தோறும் சில லட்சங்களாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

'ரவுடி பேபி' லிரிக் வீடியோ பாடல், யு டியுப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த யுவன்ஷங்கர் ராஜாவின் 10வது பாடலாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !