'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா
கடந்த வருடம் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வசூலிக்கவும் செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவிந்த் அடுத்த படத்தை இயக்குவதற்கு பதிலாக கதையின் நாயகனாக மாறி 'வித் லவ்' என்கிற படத்தில் நடித்தார். சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் மதன் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படம் நடிப்பிலும் அவருக்கு பெயர் வாங்கித் தந்து வெற்றி படமாக அமைந்தது.
பலரும் பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்ததாக டைரக்ஷன், நடிப்பு என அபிஷன் ஜீவிந்த் வலம் வருவார் என தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை அபிஷன் ஜீவிந்த் சந்தித்துள்ளார். அவரை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள அபிஷன் ஜீவிந்த், “உங்களை சந்தித்து இன்று உரையாடியதில் மிகப்பெரிய சந்தோசம் அண்ணா. உங்களிடமிருந்து பாராட்டுக்களையும் அன்பான வார்த்தைகளையும் கேட்டது மனதிற்கு நிறைவாக இருந்தது. உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியாக உணருகிறேன்” என்று கூறியுள்ளார்.