உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம்

'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம்


நடிகர்கள் சிலர் தங்களது படங்களில் 'ரிஸ்க்' ஆன காட்சிகளில் அவர்களை போன்ற ஒருவரை 'டூப்' ஆக நடிக்க வைப்பார்கள். இதனை 'ஸ்டன்ட் டபுள்' என்று குறிப்பிடுவர். பல படங்களில் பயன்படுத்தப்பட்டாலும், பெரிய நடிகர்களின் படங்களில் கொஞ்சம் டூப் தெரிந்தாலும் ட்ரோல் ஆகிவிடும் என்பதால் ஸ்டன்ட் டபுள் தெரியாத வகையில் படமாக்கிவிடுவார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'தி ராஜா சாப்' படத்தில் சண்டை, பாடல் காட்சிகளில் கூட பிரபாஸின் காட்சிகள் 'டூப்' வைத்து எடுக்கப்பட்டதாக சில சீன்கள் இணையத்தில் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிரபாஸூக்கு டூப் போட்ட நடிகரின் படமும் வெளியானது. இந்த திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதேபோல், படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்த மாளவிகா மோகனன் போன்ற உடையணிந்த ஒரு ஸ்டன்ட் நடிகரின் புகைப்படமும் வைரலானதால், அவரும் டூப் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக கயிறு உதவியுடன் சண்டைக்காட்சிகளில் தான் ஈடுபட்ட வீடியோக்களை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.

மேலும், டூப் பற்றி மாளவிகா அளித்த விளக்கத்தில், ''தி ராஜா சாப் படத்தில் அனைத்து ஸ்டன்ட்களையும் நானே செய்தேன். உடல் ரீதியாக கடும் சவால்களை எதிர்கொள்வதும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது. நடிகர்கள் தாங்களாகவே ஆக்ஷன் காட்சிகளை செய்தாலும், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு டூப் இருப்பார். தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் ஒத்திகைக்காகவோ, ஆபத்தான காட்சிகளுக்காகவோ அவர்கள் பயன்படுத்தப்படுவர். நடிகர்களுடனான இறுதி ஷாட்டை எடுப்பதற்கு முன்பு, ஆக்ஷன் டைரக்டர் அவர்களுடன் ஒத்திகை பார்ப்பது வழக்கம். நடிகர்களால் செய்ய முடியாத அளவிற்கு ஆபத்தானவை என நினைக்கும் காட்சிகளில் அந்த டூப் நடிகர்கள் நடிப்பார்கள்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !