'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? நாகார்ஜுனா பதில்
கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் 'துரந்தர்' திரைப்படம் வெளியானது. ஆதித்யா தர் இயக்கிய இந்த படத்தில் முக்கியமான இடங்களில் அக்ஷய் கன்னா மற்றும் மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனாலும் நாயகன் ரன்வீர் சிங்கை விட அக்ஷய் கன்னா நடித்திருந்த 'ரஹ்மான் டகாய்ட்' என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 1300 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளது.
இந்த படத்தில் நடிக்க முடியவில்லையே என்று நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் தங்களது வருத்தங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அக்ஷய் கன்னா கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா தான் நடிக்க வேண்டி இருந்தது என்றும், அவர் 'குபேரா' மற்றும் 'கூலி' படங்களில் நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரவியது.
ஆனால் சமீபத்தில் இது குறித்து வெளிப்படையாகவே பேசிய நாகார்ஜுனா அந்த தகவலில் எந்த உண்மையையும் இல்லை என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல, “இயக்குனர் ஆதித்யா தர் டைரக்சனில் வெளியான 'உரி' திரைப்படத்திலிருந்து அவரை நான் ரசித்து வருகிறேன். துரந்தர் படம் உண்மையிலேயே அருமையான படம். இன்னொரு வெற்றி படமாக அமையப்போகும் இதன் இரண்டாம் பாகத்தையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.