134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை
'சரிகம' நிறுவனத்தின் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டில்லி உயர் நீதிமன்றத்தில் 'சரிகம' நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : கடந்த 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்தத் திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகளை நாங்கள் சட்டப்பூர்வமாக பெற்றுள்ளோம்.
ஆனால் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அந்த பாடல்களை தன் சொந்தப் பாடல்கள் எனக்கூறி அமேசான் மியூசிக், ஜியோ சாவன் போன்ற ஆன்லைன் தளங்களில் பதிவேற்றியுள்ளார். எங்கள் நிறுவனத்தின் பாடல்கள், இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு , டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு : இளையராஜா அல்லது அவர் சார்ந்த பிரதிநிதிகள், சரிகம நிறுவனத்தின் வசம் உள்ள 134 திரைப்படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ , அவற்றுக்கு உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது. சரிகம நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது .