அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன்
சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது என்பது இப்போதெல்லாம் பெரிய விஷயம். எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், ஒரு சிலர் தங்களது திறமைக்கேற்ப சரியான வாய்ப்புகளை சரியாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அப்படி ஒருவராக 'தாய் கிழவி' படத்தின் சிவகுமார் முருகேசன் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தாய் கிழவி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்த வாரம் பிப்ரவரி 27ம் தேதி அப்படம் வெளியாக உள்ளது. அதற்குள்ளாக அடுத்த பட வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதுவும் கமல்ஹாசன் தயாரிக்க, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு 'சேயோன்'.
'தாய் கிழவி' படம் முடிந்த பின்பு, கமல்ஹாசன் படத்தைப் பார்த்தாராம். மிகவும் பிடித்துப் போக அந்தப் படம் குறித்து சிவகார்த்திகேயனிடம் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், சந்திப்புகளால் தற்போது அது 'சேயோன்' பட அறிவிப்பு வரை வந்துள்ளது.
ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாகவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் பெற்ற அடுத்த பட வாய்ப்பை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.