தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் தனது நடிப்பு ஆதிக்கத்தை செலுத்திய ரேவதி, சமீப காலமாக செலெக்ட்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள 'பேட்ரியாட்' மற்றும் ஹிந்தியில் உருவாகியுள்ள 'அஸ்ஸி' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதில் அஸ்ஸி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் ரேவதி. அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, 2022ல் தான் நடித்து தனக்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதை மூன்றாம் முறையாக பெற்றுத்தந்த 'பூதக்காலம்' என்கிற படத்தை இப்போது வரை தான் பார்க்கவில்லை என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
“பொதுவாகவே எனக்கு ஹாரர் படங்கள் பார்ப்பது பிடிக்காது.. பூதக்காலம் ஹாரர் படம் என்பதும் அந்த படத்தை நான் பார்க்காததற்கு காரணம். படத்தின் இயக்குனரிடம் நான் பூதக்காலம் படத்தில் நடிப்பதற்கு சம்மதிக்கும் முன்பே அந்த படத்தை நான் பார்க்க மாட்டேன் என முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிட்டேன். படம் முடிந்த பிறகு அவர் என்னை பார்க்கச் சொல்லி அழைத்தும் கூட மறுத்து விட்டேன். ஒருவேளை வரும் நாட்களில் என் மனது மாறினால் அந்த படத்தை பார்ப்பேனோ என்னவோ ?” என்று கூறியுள்ளார் ரேவதி.