உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா

ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த கன்னடப் படமான 'காந்தாரா, காந்தாரா சாப்டர் 1', அனிமேஷன் படமாக வந்த 'மஹாவதார் நரசிம்மா', தெலுங்கில் தேஜா சஜ்ஜா நடித்த 'ஹனுமான், மிராய்', தனுஷ் நடித்த 'குபேரா' ஆகிய படங்களும், ஆன்மிகம் கலந்த கதைகளாக அமைந்து மாபெரும் வெற்றியும், வரவேற்பும் திரையுலகினரை ஆன்மிகத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது.

தெலுங்கில் தற்போது, சிரஞ்சீவி நடிக்க உருவாகி வரும் 'விஷ்வம்பரா', விராட் கர்ணா நடிக்க 'நாகபந்தம்' உள்ளிட்ட சில படங்கள் ஆன்மிகம் கலந்த கதைகளாக உருவாகி வருகின்றன. 'ஹனுமான்' படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா அடுத்து ரிஷப் ஷெட்டி நடிக்க 'ஜெய் ஹனுமான்' படத்தை ஆரம்பிக்க உள்ளார்.

தமிழில் சுந்தர் சி இயக்க நயன்தாரா நடிக்க 'மூக்குத்தி அம்மன் 2' படம் முடிந்துள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்க, சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படமும் ஆன்மிகம் கலந்த கதைதான் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிக்க நேற்று அறிவிப்பு வெளியான 'சேயோன்' படமும் ஆன்மிகப் பின்னணி கொண்ட படம்தான் என்கிறார்கள். ஐந்திணைகளில் ஒன்றாக குறிஞ்சி நிலக் கடவுளுக்கு 'சேயோன்' என்று பெயர். முருகப் பெருமான் தான் சேயோன். சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் போற்றப்படும் பெயர்.

ஆன்மிகம் கலந்த படங்களாக இருந்தால் பான் இந்தியா அளவில் பேசப்படுகிறது என்பதால் பலரும் தற்போது இப்படியான படங்களை எடுக்க முன் வந்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !