சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர்
தமிழ்த் திரையுலகத்தில் சாதனை படைத்த மூன்று இசைக் கலைஞர்களின் பெயர்களை சென்னையில் உள்ள 3 தெருக்களுக்கு வைத்து இன்று பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
“வாராய் நீ வாராய்…”, “பொன்னான வாழ்வே மண்ணாகி…”, “கல்யாண சமையல் சாதம்…”, “புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே…”, “ஆசையே அலை போலே…”கொடுத்துப் பார் பார்…”, “வெள்ளிப் பனிமலையில்…”, “ஆயிரம் கரங்கள் நீட்டி…”, உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய திருச்சி லோகநாதன் பெயர், அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெருவிற்கு வைக்கப்பட்டுள்ளது.
எண்ணற்ற பக்திப் பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களைப் பாடியவரும் சில படங்களில் நடித்தவருமான சீர்காழி கோவிந்தராஜன் பெயர், அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர், சிவாஜிகணேசன் நடித்த பல படங்களுக்கும் கருப்பு வெள்ளை காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் பெயர், அவர் வசித்த டிமாண்டி சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் அத் தெருப் பெயர்களை ஸ்டாலின் திறந்து வைத்தார். திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.