சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருப்புப் பண பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் தங்கத் தகடுகளை சென்னையில் தன்னுடைய அலுவலகத்தில் வைத்தும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றும் பூஜை நடத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பூஜையில் நடிகர் ஜெயராம் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து நடிகர் ஜெயராமும் இந்த விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு ஏற்கனவே விசாரணை நடத்தியது.
இந்நிலையில் அமலாக்கத்துறையும் ஜெயராமிடம் விசாரணை நடத்த தீர்மானித்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதன்படி நேற்று ஜெயராம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.