பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை
உடன் பிறந்த சகோதரிகள் சினிமாவிற்கும் வருவது ஒன்றும் புதிதில்லை. அதில் அம்பிகா, ராதா போன்றவர்களே இருவரும் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். ஆனால் இருவரில் ஒருவர் வெற்றி பெற்றதே அதிகம். இதில் குறிப்பாக பத்மினி சகோதரிகளை சொல்லாம், பத்மினி அளவிற்கு லலிதாவும், ராகிணியும் வெற்றி பெறவில்லை.
இதற்கு இன்னொரு உதாரணம்தான் பண்டரிபாயும், மைனாவதியும். கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள பத்கல் என்னுமிடத்தில் ரங்கா ராவ்- காவேரி பாய் தம்பதிகளின் மகளாகப் பிறந்தவர்கள்தான் பண்டரிபாயும், மைனாவதியும். 9 குழந்தைகளைக் கொண்ட மிகப் பெரிய குடும்பம்.
இவ்வளவு பெரிய குடும்பத்தைத் தாங்கக்கூடியவரான தந்தைக்கு டிராயிங் மாஸ்டராகப் பணி. அவரது வருமானம் போதாத காரணத்தால் காலப்போக்கில் கோயில்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் ஹரி கதாகாலட்சேபம் செய்பவராகவும் மாறினார்.
தன் மூத்த மகளான 10 வயது பண்டரிபாயை நாடகத்தில் நடிக்க வைத்தார். அதன் மூலம் சினிமாவிற்கு வந்தார் பண்டரிபாய், இவரின் சினிமா புகழை பார்த்து வியந்து மைனாவதியும் சினிமாவிற்கு வந்தார். ஆரம்ப காலத்தில் அக்காவிற்கு துணையாக சென்றவர் அவர் நடிக்கும் படங்களில் சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
1956ல் கிருஷ்ணன், பஞ்சு இயக்கத்தில் வெளியான 'குல தெய்வம்' படத்தில் குறும்புத்தனம் கொப்பளிக்கும் இளம் பெண்ணாக மைனாவதி நடித்தார். இந்த படம் அவருக்கு தனித்த அடையாளத்தை கொடுத்தது.
கவிஞர் கண்ணதாசன் முதன் முதலில் தயாரித்த 'மாலையிட்ட மங்கை' படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் குரலில் இடம் பெற்ற, 'செந்தமிழ்த் தேன்மொழியாள்; நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பாடலில் இடம்பெற்ற மைனாவதியின் தனித்துவமான நடனம் இப்போதும் அவரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
அதன்பிறகு ஆரவல்லி, வண்ணக்கிளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் பெரும்பான்மையான படங்களில் இரண்டாம் நிலை நாயகியாகவே அவர் தொடர்ந்தார். 50 படங்களுக்குள்ளாகவே தமிழ்த் திரையுலகிலிருந்து விடை பெற்றுக்கொண்டு, கன்னடப் படங்களில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார்.
கன்னடத் திரையில் 1953ல் தொடங்கிய அவரது திரையுலகப் பயணம் 1970களில் திருமணத்துக்குப் பின் நிறைவு பெற்றது. அதன் பின் பல ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சில சின்னத்திரை தொடர்களை தயாரித்து நடித்தார். 2012ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி தன் 78ம் வயதில் காலமானார்.