உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை

'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை


'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) சார்பில் 6500 கி.மீ.,க்கு பிரம்மாண்ட கடற்கரை சைக்கிள் மாரத்தான் நடக்கிறது. குஜராத், மேற்கு வங்கத்தில் தொடங்கிய மாரத்தான் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களை கடந்து பிப்.,22ல் கொச்சியில் நிறைவடைகிறது.

கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு, தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாரத்தான் நடக்கிறது. இதில் பங்கேற்ற வீரர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வந்தனர். அவர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்துகொண்டார்.

அவர் பேசியதாவது: நடிகர்கள் உண்மையான ஹீரோக்கள் அல்ல. நம் நாட்டின் பாதுகாப்பிற்காக வலம் வரும் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். கடல் வழி போதைப் பொருள் ஊடுருவலை போலீசார், அதிகாரிகள் தடுத்தால் போதாது. நாமும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போது போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது. மாணவச் செல்வங்கள் போதையின் பாதையில் செல்லாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர், ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். நேற்று காலை நவபாஷாண கடற்கரையில் இருந்து துவங்கிய வீரர்களின் சைக்கிளிங் மாரத்தானை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !