ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம்
தமிழில் 'சிங்கம்புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த அவர் தற்போது 'ரேச்சல்' என்கிற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி துறை, நடிகை ஹனிரோஸ் தனது வருமானம் அதனால் கிடைத்த பலன்கள் ஆகியவற்றை முழுமையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் அதனால் அவரது பல வருட வருமான வரி கணக்கை மொத்தமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிராக நடிகை ஹனிரோஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஜிஎஸ்டி துறையின் நோட்டீசை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இப்படி ஒருவருக்கு ஒரே நோட்டீஸில் பல வருட வருமான வரி கணக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடியாது. ஒவ்வொரு வருடத்திற்கும் தனித்தனியாக தான் கணக்கு கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கூறி அவருக்கு அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி துறையின் நோட்டீசை தள்ளுபடி செய்துள்ளது. இது நடிகை ஹனிரோஸுக்கு தற்காலிக நிம்மதி என்றாலும் அடுத்து வரும் நாட்களில் ஜிஎஸ்டி துறையில் இருந்து ஒவ்வொரு வருடத்திற்குமான கணக்கு கேட்டு அனுப்பப்படும் நோட்டீஸ்களை அவர் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.