சிவராஜ்குமாருக்கு கர்நாடக முதல்வர் வாழ்த்து
கன்னடத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் முக்கியமானவர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவர். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்த சிவராஜ்குமார், தமிழில் 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ஜெயிலர் 2' படத்திலும் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
1986ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அவர் கதாநாயகனாக அறிமுகமான படத்தின் பூஜை நடைபெற்றது. அன்றுதான் மேக்கப் போட்டு கதாநாயகனாக நடித்தார். அவர் சினிமாவில் நடிக்க வந்து 40 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதைக் கொண்டாடி வருகிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரபல நடிகர் சிவராஜ் குமார், ஹாட்ரிக் ஹீரோ, கன்னட திரைத்துறையில் 4 வெற்றிகரமான தசாப்தங்களை நிறைவு செய்துள்ளார் என்பதற்கு வாழ்த்துக்கள். எனது ஓய்வு நேரத்தில், அவரது பல திரைப்படங்களைப் பார்த்து ரசித்துள்ளேன்.
ரதசப்தமி, ஜனுமட ஜோடி, ஜோடி ஹக்கி, தகரு—இது போன்ற ஹிட் படங்களின் தொடர்ச்சியால், சிவராஜ் குமார் கன்னட சினிமாவின் பெருமையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மேலும் அவரது நடிப்புத் திறமைக்கு யாரும் ஈடு இணையில்லை.
கலை சேவையில் மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ள கன்னடர்களின் அன்புக்குரிய சிவண்ணா அவர்களுக்கு, இறைவன் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் அருளட்டும் என வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமான 'ஆனந்த்', அடுத்து அவர் நடித்து வெளிவந்த 'ரதசப்தமி, மன மெச்சிந்த ஹுடுகி' ஆகிய மூன்று படங்களும் வெற்றியும், வரவேற்பும் பெற்றதால் ஹாட்ரிக் ஹீரோ என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
தற்போது 'ஜெயிலர் 2' தவிர, கன்னடத்தில் 'உத்தரகாண்டா', தெலுங்கில் 'பெத்தி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.