தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் வழக்கம். தற்போதுள்ள நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில் 2026-29 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல், சென்னை தனியார் கல்லூரியில் இன்று (பிப்.,22) காலையில் துவங்கியது. இதில் முரளி ராமசாமி, தமிழ் குமரன் தலைமையில் இரண்டு அணிகள் மோதின. தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர், 2 இணை செயலாளர், 26 செயற்குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடந்தது.
ஓய்வுப்பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்தலில் ரஜினிகாந்த், விஷால், டி.ராஜேந்தர், மோகன், குஷ்பு உட்பட 1,171பேர் ஓட்டு போட்டனர். மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், 6 மணிக்கு மேல் ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 ஓட்டுகள் பெற்று 527 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மணி மகன் ஆவார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக ஓட்டுகள் பெற்றவர் என்ற சிறப்பை தமிழ்குமரன் பெற்றார்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 ஓட்டுகளும், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர்.