உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்….

தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்….

இளமையான கதாபாத்திரங்களை முதன்மையாக வைத்து திரைப்படங்கள் வருவதுதான் வழக்கம். வயதான கதாபாத்திரங்களை முதன்மையாக வைத்து வந்த திரைப்படங்கள் மிக மிகக் குறைவு. அப்படி வயதான கதாபாத்திரம் என்றால் இன்றைய ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது 'இந்தியன், கபாலி'' கதாபாத்திரங்களாகத்தான் இருக்கும். அந்தக் கதாபாத்திரங்களை 60 பிளஸ் வயது கதாபாத்திரங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அந்த வயதுக்கு பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தி தமிழ் சினிமாவில் வந்த படங்களில் 1953ல் வெளிவந்த 'ஔவையார்' படத்தை ஆரம்ப உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அந்த வயதான கதாபாத்திரத்தில் அவர் நடித்த போது அவருக்கு வயது 45.

அதற்கடுத்து சுமார் 70 வருடங்களுக்குப் பிறகு வயதான பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படமாக இந்த வாரம் வெளியாக உள்ள 'தாய் கிழவி' படம் இருக்கிறது. பாட்டி என மரியாதையாக அழைக்கப்படுவதை கிராமப்புற பேச்சு வழக்கான கிழவி என்பதைச் சேர்த்து இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும், அந்த கிழவிகளில் மூத்தவராக இருப்பவரை தாய் கிழவி என்று அழைப்பார்கள்.

ராதிகா சரத்குமார் இந்த 'தாய் கிழவி' கதாபாத்திரத்தில் கலக்கலாக நடித்துள்ளார் என படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். கமல்ஹாசனும் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளது பட புரமோஷனுக்குக் கூடுதல் பலம்.

இன்றைய 2 கே ரசிகர்கள் இப்படியான படங்களையும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் படக்குழு இப்படத்தை உருவாக்கியுள்ளது.

இந்தியத் திரையுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 50 வருட அனுபவத்தை நெருங்கும் ராதிகா, இதுவரையில் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நடிப்புக்காக தேசிய விருதைப் பெற்றதில்லை. அந்தக் குறையை இந்தப் படம் தீர்த்துவிடுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !