சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு திரையுலகிலும் இளம் ஹீரோக்கள் அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் கூட ஒவ்வொரு மொழியிலும் கமல்-ரஜினி, மோகன்லால்-மம்முட்டி, சிரஞ்சீவி-பாலகிருஷ்ணா என சீனியர் ஹீரோக்களின் ஆதிக்கம் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. சில காரணங்களுக்காக இந்த முன்னணி ஹீரோக்கள் பலரும் இத்தனை வருடங்களாக இணைந்து நடிக்காமல் தனித்தனியாகவே நடித்து வந்தனர்.
மலையாளத்தில் மட்டும் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் அடிக்கடி படங்களில் இணைந்து நடித்தனர். அவர்கள் கூட ஒன்றாக இணைந்து நடித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் தற்போது 'பேட்ரியாட்' என்கிற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி-கமல் கூட்டணி கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. நெல்சன் இயக்கும் புதிய படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கிலும் இதே போல முன்னணி ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தெலுங்கு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை வருடங்களில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. 80, 90 காலகட்டத்தில் சில முன்னணி இயக்குனர்கள் அதற்கான முயற்சியை எடுத்தாலும் அவை சரியாக கைகூடவில்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவின் 50வது வருட திரையுலக கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தான் ரஜினி-கமல், மோகன்லால்-மம்முட்டி என அந்தந்த மொழி பிரபலங்கள் மீண்டும் இணைந்து நடிப்பதால் சிரஞ்சீவியும் பாலகிருஷ்ணாவும் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என இருதரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.