8 வார ஓடிடி இடைவெளி; தெலுங்கு திரையுலகம் ஆலோசனை
2020ம் ஆண்டு கொரானோ தாக்கம் வந்த போது இந்தியாவில் ஓடிடி தளங்கள் அபரிமிதமாக வளர ஆரம்பித்தன. தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் படங்களை நேரடியாகவும் வெளியிட ஆரம்பித்தார்கள். ஆனால், அடுத்த ஓரிரு வருடங்களில் அந்த நேரடி வெளியீடு குறைந்துவிட்டது.
இருந்தாலும் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள், ஓடிடி தளங்களில் 4 வாரங்களுக்குப் பிறகு வெளியாகும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே அதற்குள்ளாக வெளியாக ஆரம்பித்தன.
ஹிந்தியைப் பொறுத்தவரையில் 8 வார இடைவெளிக்குப் பிறகுதான் படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முடியும். மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கத்தினர் அந்த விஷயத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்கிறார்கள். ஆனால், அப்படியான 8 வார இடைவெளி தென்னிந்தியத் திரையுலகில் பின்பற்றப்படுவதில்லை.
இதனிடையே, இங்கும் 8 வார இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் எழும், பின் அடங்கிப் போய்விடும். தெலுங்குத் திரையுலகத்தில் இது குறித்து நேற்று முக்கிய ஆலோசனை ஒன்று நடத்தப்பட்டது. தியேட்டர் அதிபர்கள் 8 வாரம் என்பதை அமல்படுத்தியே ஆக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதனால், விரைவில் இது குறித்து முடிவெடுத்து அதை அமல்படுத்த உள்ளார்கள் எனத் தெரிகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் இப்போதுதான் பதவியேற்றுள்ளனர். அவர்களது முதல் சவாலாக இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகிலும் அமையலாம்.
இந்த வருடம் ஆரம்பம் முதல் தமிழகத்தில் பல தியேட்டர்களின் நிலைமை மோசமாக உள்ளது. இந்த வாரம் முதலே பல சிங்கிள் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படுவது நடந்து வருவதாகத் தகவல். எனவே, தியேட்டர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு இது குறித்து அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது.