பெண்கள் வரவேற்பை எதிர்பார்க்கும் 'தாய் கிழவி'
அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தாய் கிழவி' படம் நாளை பிப்ரவரி 27ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிரிமியர் காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. பல சினிமா பிரபலங்களும், பத்திரிகையாளர்களும், படக்குழுவினரும் அதில் கலந்து கொண்டனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் இயக்குனரையும், ராதிகாவையும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
எந்த சிரமம் வந்தாலும், எதையும் எதிர்கொண்டு பெண்கள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. நகைச்சுவை, சென்டிமென்ட் என கிராமிய வாழ்வியலுடன் நகரும் கதை. பெண்கள் இந்தப் படத்தை அதிக அளவில் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை படக்குழுவிற்கு உள்ளது. முழு ஆண்டுத் தேர்வு சூழல் மட்டும்தான் அதற்கான சவாலாக உள்ளது. ஆனாலும் பெண்கள் வரவேற்பும் அதிகளவு கிடைத்து பெரிய வெற்றியை கொடுக்கும் என நம்பலாம்.
இப்போதைய சினிமா ரசிகர்களாக தியேட்டர்களுக்கு அதிகம் வருபவர்களில் இளைஞர்கள்தான் முதலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் படம் பிடிக்க வேண்டும். வேறு படங்கள் இல்லாததால் அவர்களும் தியேட்டர்களுக்கு வந்தால் படம் நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.